'அதை படிக்கும்போது' - சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர் - என்ன நடந்தது..?
பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவாலிடம் இளம் கிரிக்கெட் வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.
ரகுவன்ஷி
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கியவர் ரகுவன்ஷி. இவர் இந்திய அணிக்காக யு19 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடியுள்ளார்.
ரகுவன்ஷி பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் பேச்சிற்கு கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். முன்னதாக உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு குறித்தும் சாய்னா நேவால் பேசியிருந்தார்.
அதாவது, இந்தியா போன்ற விளையாட்டு கலாச்சாரம் குறைவாக இருக்கும் நாட்டில், தடகள வீரர்களின் சாதனைகள் அசாத்தியமானது. கிரிக்கெட் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறது.
மன்னிப்பு
கிரிக்கெட்டை விடவும் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து ஆகியவை உடல் உழைப்பை கோருபவை. வேகமாக நகரும் விளையாட்டில் வீரர்கள் மூச்சு வாங்குவதற்கு கூட நேரம் கிடைக்காது.
ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல" என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த ரகுவன்ஷி, பும்ராவின் 150 கி.மீ வேக பவுன்சர் தலைக்கு வரும் போது சாய்னா நேவால் எப்படி நகர்வார் என்பதை பார்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் சாய்னா குறித்த சர்ச்சை கருத்திற்கு ரகுவன்ஷி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்.
நான் நகைச்சுவையாக தான் அந்த கருத்தை பதிவிட்டேன். ஆனால் மீண்டும் அதனை படிக்கும்போது, முதிர்ச்சியற்ற கருத்தாக தெரிகிறது. எனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்..