இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வில் பெரிய மாற்றம் - கம்பீரால் மீண்டும் ஏமாற்றமா..?
அனைத்து வீரர்களும் 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அணியில் பல மாற்றங்களை செய்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், பதவியேற்புக்கு முன்பு அவர் பிசிசிஐ-யிடம் சில கண்டிஷன்களை முன்வைத்திருந்தார்.
அதில் முக்கியமானது டெஸ்ட்டுக்கு ஒரு அணியும், ஒரு நாள் போட்டிக்கு ஒரு அணியும் தயார் செய்ய வேண்டும் என்பதுதான். இதனால் பல இளம் வீரர்களுக்கு இந்திய அணிகள் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு ஒரு பெரிய யூ டர்னை போட்டுள்ளார். அதாவது, இனி அனைத்து வீரர்களும் 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
3 வகையான போட்டி
இது குறித்து கம்பீர் கூறுகையில் "ஒரு கிரிக்கெட் வீரர் நாட்டுக்காக முதலில் விளையாட வேண்டும். நாடு உங்களை எதற்கு அழைக்கிறதோ அதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இனி ஒரு நாள் போட்டி மட்டும்தான் விளையாடுவேன், டெஸ்ட் போட்டி மட்டும்தான் விளையாடுவேன் என்று சொல்லக்கூடாது.
3 வகையான போட்டியிலும் விளையாடுவதற்கு தயாராக இருங்கள். காயம் அடைந்து விடும் என்று பயப்படவும் கூடாது. 3 வகையிலான கிரிக்கெட்டையும் விளையாடுங்கள். அதன் பிறகு காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன வழியோ அதை பாருங்கள்.
அதை விட்டுவிட்டு இனி இந்தப் போட்டிகளுக்கு மட்டும் தான் விளையாடுவேன் என்று கூறக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். சுப்மன் கில் போன்ற வீரர்கள் 3 வகையான போட்டிகளிலும் விளையாடுகின்றனர். கம்பீரின் இந்த முடிவால் பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.