நீங்க ஏன் சிரிக்கவே மாட்றீங்க..? தமிழக வீரரின் கேள்விக்கு கம்பீர் நச் பதில்!
ஏன் சிரிப்பதில்லை? என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமான வீரராக இருந்தவர் கவுதம் கம்பீர். இவர் இந்திய அணி 2007-ல் டி20 உலகக் கோப்பை வென்றதிலும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கம்பீரிடம் "நீங்கள் ஏன் அடிக்கடி சிரிப்பதில்லை? என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் "எனக்கு புரியவில்லை. சில சமயங்களில் சிரிக்காததால் இவர் சீரியஸானவர், எரிச்சலுடன் இருக்கக்கூடியவர், எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருப்பவர் என்று மக்கள் பேசுகின்றனர்.
இருப்பினும் அந்த மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதைப் பார்ப்பதற்காகவே வருகின்றனர். அது மாதிரியான தொழிலில்தான் நாங்கள் இருக்கிறோம். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது.
என்னுடைய குணாதிசயம்
நான் பொழுதுபோக்கில் இல்லை. நான் பாலிவுட் நடிகர் கிடையாது. நான் கார்ப்பரேட் கிடையாது. நான் கிரிக்கெட்டர். உடைமாற்றும் அறைக்கு வெற்றியாளராக திரும்புவதே என்னுடைய வேலையாகும்.
வெற்றி பெறும் உடைமாற்றும் அறையே மகிழ்ச்சி நிறைந்த அறையாக இருக்கும். எனக்காக போராடுவதற்கும் எனது அணியினருக்காக போராடுவதற்கும் எதிரணியை முறியடிப்பதற்கும் விளையாட்டின் விதிமுறைக்குள் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்காக சிலர் அவர் மிகவும் கடினமானவர், குறிப்பிட்ட வழியில் விளையாடுகிறார் என்று சொல்வார்கள். ஆம் நான் அப்படி செய்கிறேன்.
ஏனென்றால் அது எனது திறனை சிறப்பாக செய்ய உதவுகிறது. அது என்னுடைய குணாதிசயம். என்னைப் பொறுத்த வரை அது ஒரு ஆவேசம். நான் உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன். அதில் என்ன தவறு? நான் வெற்றிக்காக வெறித்தனமாக இருக்கிறேன். அதுவே எனக்குள்ள பிரச்சினை" என்று பதிலளித்துள்ளார்.