தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது - ஆளுநர் வேதனை!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
கல்வித்தரம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எண்ணித் துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார்.
தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். தற்பொழுது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசியச் சராசரியைவிட அது குறைவாக உள்ளது என்று கூறினார்.
ஆளுநர் ரவி
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 75% மாணவர்களில் 40% மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களைக்கூடப் படிக்க முடியவில்லை.இது குறித்து ஆய்வு அறிக்கை வெளியானது. இதற்குக் கற்பித்தல் குறைபாடே காரணம் என்று கூறினார்.
மேலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது இதனால் அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள்.
இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது என்று கூறினார் . இதனால் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.