ஆர்.என்.ரவி தமிழக ஆளுநரா அல்லது பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரா? செல்வப்பெருந்தகை கேள்வி

Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu K. Selvaperunthagai
By Karthikraja Sep 02, 2024 09:30 PM GMT
Report

தமிழக விரோத பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவியை செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

ஆர்.என்.ரவி

சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக பேசினார். 

rn ravi

ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆளுநரை நூலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என கூறினார். 

7 மாதங்களாக தமிழக ஆளுநர் என்ன செய்தார்? உச்சநீதிமன்றம் கேள்வி

7 மாதங்களாக தமிழக ஆளுநர் என்ன செய்தார்? உச்சநீதிமன்றம் கேள்வி

செல்வப்பெருந்தகை

மேலும் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி, மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிக்கையில், "தேசிய பாட திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடதிட்டத்தின் தரம் குறைவாக உள்ளதென தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பேசும் போது குற்றம் சாட்டியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக செயல்படுவதை நாள்தோறும் ஒரு வேலையாகவே ஆளுநர் செய்து வருகிறார். 

selvaperunthagai

தமிழக அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனை இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக கூறிய பிறகு எதேச்சதிகாரமாக தமிழக அரசுக்கு விரோதமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக கருத்துகளை கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு

ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததோடு, தமிழ்நாடு அரசுக்கென கல்விக் கொள்கை வகுக்க நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசுவது எவ்வகையிலும் ஏற்கக் கூடியதல்ல. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை உதாசீனப்படுத்துகிற வகையில் ஆளுநரின் கருத்து அமைந்திருக்கிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கிற லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதாக கூறி தான் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதற்கு ஒப்புதல் தராமல் முடக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் அனிதா உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ள கொடுமையான நிகழ்வு ஏற்பட்டது.

3586 கோடி நிதி

2024-25 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் செயல்படுத்த தமிழ்நாட்டுக்கு ரூபாய் 3586 கோடி நிதிநிலையில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் ஒன்றிய அரசின் 60 சதவிகித பங்களிப்பான ரூபாய் 2152 கோடியை ஜூன் மாதம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கிய பிறகும் இதுவரை விடுவிக்காமல் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் தமிழக கல்வித்துறை இருப்பது குறித்து ஆளுநர் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் ?

தமிழக மாணவர்கள் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருக்குமேயானால் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய தொகையை விடுவிக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை? ஏதோவொரு வகையில் தமிழக அரசை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்கு துணை போகிற ஆளுநர் தமிழக பாடத்திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? 

இந்நிலையில் மத்திய பாட திட்டத்திற்கு ஆதரவாகவும், மாநில பாட திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜக போக்கையே காட்டுகிறது. ஆர்.என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரா என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகத்தின் பாடத் திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அதிகார மமதையையே காட்டுகிறது. இத்தகைய தமிழக விரோத பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.