பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - எச்சரித்த முதல்வர்!
சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆதரவு முழக்கம்
கர்நாடக சட்டப்பேரவையில் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானபோது,
‘சையத் நசீர் ஹூசேன் ஜிந்தாபாத்'.. பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதாக செய்திகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சட்டப்பேரவையில் பாஜக, மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
முதல்வர் எச்சரிக்கை
தொடர்ந்து, பெங்களூருவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் சித்தராமையா, “சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட குரல் பதிவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
அதன் முடிவுகள் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். அதில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.