தண்ணீர் தரவில்லை என்றால் ஆட்சி கலைக்கப்படுமா.? துணிந்து களமிறங்கும் சித்தராமையா
காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என்பது தங்கள் நிலைப்பாடு என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரி நீரை தர கர்நாடக அரசு மறுத்து வரும் சூழலில் தஞ்சையில் விவசாயிகள் நீர் இன்றி தவித்து வருவதாக தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்திடம் முறையிட்டு வருகின்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடக மாநில அரசு அதிரடியாக மறுத்து வரும் சூழலில் இன்று மீண்டும் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இக்கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று அளித்த பரிந்துரையின் படி 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
துணியும் சித்தராமையா
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அதிரடி முடிவை எடுத்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்.காவிரியில் இருந்து இனி ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது என்பது தான் தங்கள் முடிவு என அதிரடியாக கூறிய அவர், அதுவே தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவது குறித்து ஆலோசிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் சட்டவல்லுனர்கள் கூட்டம் ஒன்று நடக்கப்போவதாக கூறிய அவர், தண்ணீர் திறக்கப்படாத நிலையில் நீர்நிலைகள் மத்திய அரசால் கையகப்படுத்தப்படுமா..?நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படுமா..? மாநில அரசாங்கத்தை இதன் மூலம் கலைக்கமுடியுமா..? போன்ற ஆலோசனைகள் இக்கோட்டத்தில் நடைபெறப்போவதாக தெரிவித்தார்.