தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது...திட்டவட்டமாக கூறிய சித்தராமையா..!!
இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம்
நேற்று டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
சித்தராமையா திட்டவட்டம்
இந்நிலையில், கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் தாங்கள் இல்லை என தெளிவுபடுத்தினார்.
மேலும், பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.