இங்க நான் கால் வைத்தபோது; அப்பா படுகொலை, என் அம்மாவை.. உருகிய பிரியங்கா!
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தி பிரியங்கா உருக்கத்துடன் பேசினார்.
மகளிர் அணி
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பங்கேற்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இருவரும் தமிழகத்திற்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து, பிரியங்கா காந்தி "32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலைச் சேகரிக்க வந்தேன்.
பிரியங்கா உருக்கம்
சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டிருந்தார். நானும், என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது.
எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விளக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தி இருந்தது. நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரிகள்" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.