மகளிர் உரிமை மாநாடு - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு!
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என கனிமொழி எம்.பி. அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமை மாநாடு
சென்னை நந்தனத்தில் வருகிற அக்டோபர் 14-ம் தேதி திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து, கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் 'திராவிட மாடல்' ஆட்சியின் வாயிலாக,
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்”, “புதுமைப் பெண் திட்டம்”, “மகளிர் சுய உதவிக் குழுக்கள்”, “மகளிரை அர்ச்சகராக்கியது" என, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
அக்டோபர் 14
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் இந்தியா கூட்டணி கட்சியின் மகளிர் தலைவர்கள் என்ற முறையில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே, மெகபூபா முப்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.