ஆடை, அலங்காரம் பெண்ணின் தனிப்பட்ட உரிமை - கனிமொழி எம்.பி.
ஆடை, அலங்காரம் தேர்ந்தெடுக்கும் உரிமை அதை பயன்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே உள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். மேலும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய கனிமொழி எம்.பி., சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றார். பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் கம்யூனிகேஷனில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தாய் மொழி
தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது. மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றீர்கள். மொழி, அடையாளம் ஆகியவை பெருமையாக இருக்கிறது என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரின் அடையாளமும் மொழி.
என் மீது இன்னொரு மொழியை திணித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடிய நிலை யாருக்கும் இல்லை. மொழி வழியாகத்தான் என்னை உணர்ந்து கொள்கிறேன். தாய் மொழியும் சுயமரியாதையும் கூட அதுவே என்றார். மொழிப்போர் நிலை வந்து விடக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பெண் உரிமை
இன்று சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதும், அலுவலக மொழியாக இருந்த அதை தேசிய மொழியாக கொண்டு வருவதையும் நிச்சயமாக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய முதலமைச்சர் மட்டும் அல்ல மற்ற முதலமைச்சர்களும் இதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளார்கள்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கோவை வந்த போது பேசிய கருத்துக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., அலங்காரம், உடை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அதை பயன்படுத்தும் பெண்ணுக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என கூறியுள்ளார்.