நிறுவனம் கொடுத்த டார்ச்சர்; 45 நாட்கள் தூங்கல - ஊழியர் விபரீத முடிவு!
பணி அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி அழுத்தம்
உத்தரப்பிரதேசம், ஜான்சியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தருண் சக்சேனா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் மனைவி மேகா, குழந்தைகள் யாதர்த், பிஹு உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வேலை பார்க்கும் நிறுவனம் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பளம் பிடித்தம் செய்வதாக மிரட்டியதாகவும் அடிக்கடி கூறியுள்ளார். இந்நிலையில், திடீரென பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நானும், எனது சக தொழிலாளர்களும் எங்கள் பகுதியில் திரும்ப வராத இஎம்ஐகளுக்கு பணம் செலுத்தினோம். பணத்தை திரும்பப்பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மூத்த அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்தோம்.
ஊழியர் தற்கொலை
ஆனால் அவர்கள் எனது பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. நான் 45 நாட்களாக தூங்கவில்லை, சாப்பிடவும் இல்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். எந்த விலை கொடுத்தாலும் இலக்குகளை அடையும்படி அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி மூத்த மேலாளர்கள் என்னை வற்புறுத்துகிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றி நான் மிகவும் பதற்றமாக இருக்கிறேன், நான் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டேன், நான் செல்கிறேன்” எனத் தெரிவித்து மூத்த அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கவுதம் கூறுகையில்,
"மூத்த அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடமிருந்து புகார் வந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.