மனைவி, மகன், தந்தையை கொன்று ஐடி ஊழியர் தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!
ஐடி நிறுவன ஊழியர் தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கடன் தொல்லை
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவராமன்(85). பெங்களூரு விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வசந்தா(75). இவர்களது மகன் திலக்(38), இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.
கொரோனாவுக்குப்பின் வீட்டில் இருந்தபடியே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மகேஷ்வரி(33), மகன் சாய்கிரிஷ்சாந்த்(6). குழந்தைக்கு வாய் பேச முடியாது.
தற்கொலை
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு வாட்ஸ்-அப் மூலம் திலக் அனுப்பிய தகவலில், குழந்தையை குணப்படுத்த முடியாததாலும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அளித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிஷ்சாந்த் மற்றும் திலக் ஆகியோர் இறந்துகிடந்தனர்.
அவரது தாய் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து விசாரணையில், குழந்தை மருத்துவச் செலவுக்காக அதிக கடன் வாங்கியதும், கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதில் நஷ்டமடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.