இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!
எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல்
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதே சமயம்,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சருடன் இன்று சந்திப்பு
இந்த நிலையில்,எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு அவருடன் இணைந்து யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே,யஷ்வந்த் சின்ஹா அவர்களின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அவர் தங்கவுள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுத்தியில் உயர் அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே சமயம்,துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!