நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் - குலாம்நபி ஆசாத் புகழாரம்!
நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் 7ம் தேதி ஆட்சியில் அமர்ந்தார். "முத்துவேல் கருணநிதி ஸ்டாலின் என்னும் நான்" என்று மேடையில் அவர் கூறிய போது மெய் சிலிர்த்துப் போனது.
'தமிழக மக்களுக்காக உழைப்பேன்' என்று அன்றைய தினம் அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை ஒவ்வொரு நாளும் தமிழக மக்களுக்கு நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது நடவடிக்கைகளை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது. பதவியேற்ற இரண்டே மாதங்களில் 'சிறந்த முதல்வர்' என்ற பெயரையும், புகழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றார்.
தமிழகம் வரும் எந்த தலைவர்களாக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் செல்வது கிடையாது. அந்த வகையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வந்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அரை மணி நேரத்துக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார் குலாம் நபி ஆசாத், அந்த பதிவில், தந்தை போலவே மகன் செயல்படுகிறார். நாட்டின் சிறந்த முதல்வர். அவரது செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நாளைக்கு 19 மணி நேரம் உழைக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.