இன்னமும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு இதுதான் காரணம் - பிரேமலதா தாக்கு!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் பேசியதாவது "பல்லாயிரக் கணக்கான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு மக்களவை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போது தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பதை குறித்து விரைவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் இதுவரை தெளிவு இல்லை.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 4 முறை நிராகரிக்கப்பட்ட போதிலும் இன்னமும் அவர் அமைச்சராக தொடர்கிறார் என்றால் திமுக தலைவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்கும் செந்தில் பாலாஜி எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.
போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாகத்தான் டாஸ்மாக் கடைகளை மூட முடியும் என்பது உண்மைதான். இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்" என்று பேசியுள்ளார்.