இனி நந்தினி நெய்தான் - பிரசாதம் தயாரிக்க அரசு உத்தரவு!
நந்தினி நெய்யை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நந்தினி நெய்
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவாகரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு அங்கு உள்ள அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில கர்நாடக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கர்நாடக அரசின் நந்தினி நெய் நீண்ட காலமாக திருப்பதிலட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நந்தினி நெய்யில் எந்தவிதமான கலப்படமும் இல்லை என ஆந்திர மாநில அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த விவகாரம் குறித்து கர்நாடக இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
அரசு உத்தரவு
அதில்கர்நாடக கோயில்களில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்து சமய அற நிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளோம்.
அதன்படி இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரத்து 500 கோயில்களிலும் பிரசாதம் தயாரிப்பதற்கும், விளக்கு ஏற்றுவதற்கும், இதர சடங்குகளுக்கும் கர்நாடக அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.