திருப்பதி லட்டு விவகாரம் - மாட்டு கொழுப்பு நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதா?
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பெரிய மவுஸ் உண்டு.
இந்நிலையில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுப்பு
இதன் பின் திருப்பதி லட்டில் கொழுப்பு உள்ளதா என ஆய்வு செய்த கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், இது அரசியலுக்காக திட்டமிட்டு குற்றம் சுமத்தப்படுகிறது, நீதிபதி ஒருவரின் தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
திண்டுக்கல் நிறுவனம்
இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் தான் நெய் அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதுவரை இந்நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய்யை அனுப்பி உள்ளது.
கடந்த ஜூலை மாதமே இந்த நிறுவனத்தின் நெய்யை ஆய்வு செய்த திருப்பதி தேவஸ்தானம் இதில் கலப்படம் இருப்பதாக கூறி அந்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 20000 லிட்டர் நெய்யை திருப்பி அனுப்பினர். இந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்ததாகவும், விரைவில் இந்நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.
கடத்த ஜூலை 16 ஆம் தேதி இந்த ஆய்வறிக்கை வந்துள்ள நிலையில் இந்த விவகாரம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து, தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையியல் எங்கள் நிறுவன நெய் தரமானதுதான் என்றும், எந்த ஆய்வுக்கும் தயார் என்றும் அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.