திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு; ஆய்வில் உறுதி - அதிர்ந்த பக்தர்கள்
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
திருப்பதி லட்டு
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பெரிய மவுஸ் உண்டு.
இந்நிலையில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் கலப்படம் இருப்பதாகவும், குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஒய்.எஸ்.ஆர் மறுப்பு
ஆனால், எங்களது ஆட்சியில் தரமான பொருட்களைக் கொண்டு தான் பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம். இந்த குற்றச்சாட்டை மறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி , “சந்திரபாபு நாயுடுதனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தியுள்ளார்.
திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது.சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார்.
ஆய்வில் உறுதி
குஜராத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் திருப்பதி லட்டில் கொழுப்பு உள்ளதா என ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் "திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.