உன்னை திருமணம் செய்யவில்லையென்றால்.. பாதிரியாராக செல்வேன் - போப் காதல் கடிதம்
மறைந்த போப் எழுதிய காதல் கடிதம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
போப் மறைவு
கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர்கொண்ட போப் பிரான்சிஸ், 22 வயதில் கிறிஸ்தவ சமுதாயத்துக்காக சேவையாற்றத் தொடங்கினார். இவர் தனது 12 வயதில், அமலியா டாமோண்டே என்பவருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்மணி பல ஆண்டுகள் கழித்து பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். "அவர் எழுதிய கடிதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காகிதத்தில் வெண்மை நிற வீட்டை வரைந்திருந்தார். அதன் மேற்கூரை சிவப்பு நிறத்தில் இருந்தது.
காதல் கடிதம் வைரல்
எதிர்காலத்தில் நம் திருமணத்துக்குப் பிறகு உனக்காக நான் வாங்கப்போகும் வீடு இது. நான் உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் சென்றுவிடுவேன்" என அக்கடிதத்தில் எழுதியிருந்தது. "ஒரு பையனிடமிருந்து உனக்கு கடிதம் வருகிறதா? என ஆவேசத்துடன் பேசி என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என் தாய்.
அதன்பிறகு நாங்கள் இருவரும் சந்திக்காதபடி என் தாய் என்னை விலக்கியே வைத்திருந்தார்" அந்த வயதில் எனது பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். அதனால் அக்கடிதம் பிற்காலத்தில் கவனிக்கப்படாமலேயே போனதாக குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின் போப் பிரான்சிஸ் குடும்பம் மெம்பிரில்லர் சாலையில் இருந்து விலகிச் சென்றது. மறுபுறம், அமலியா டாமோன்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன்பிறகு, அமலியா மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள நினைக்கவில்லை. அந்த காதல் நிறைவேறாமல் போனதாலோ என்னவோ, கடிதத்தில் எழுதியபடியே அவர் எதிர்காலம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.