3 ஆண்டுகள் சிறை; பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - பதவி கிடைக்குமா?
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.
பொன்முடி
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
மேல்முறையீடு
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.
வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடி, அவரின் மனைவிக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனுவில், “இந்த வழக்கை பொறுத்த வரையில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரணை செய்யவில்லை. ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.