ஆற்றில் நடந்த மாந்திரீக பூஜை - கிராமத்தை நடுங்கவைத்த மர்ம ஆசாமி!
திருப்பத்தூர் அருகே நீரோடையில் மாந்திரீக பூஜை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருனாப்பட்டு கிராமத்தில் எகிலேரி என்ற நீரோடை ஒன்று உள்ளது. இந்த நீரோடைக்கு அருகே ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்திக்குச் சொந்தமாக நிலம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி தன்னுடைய நிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த எகிலேரி நீரோடையில் சந்தேகத்திற்குரிய வகையில் மாந்திரீக பூஜை பொருள்களான எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம், பூ, தேங்காய், உள்ளிட்டவை இருந்துள்ளது.
மேலும் நரபலி ஏதாவது கொடுக்கபட்டுள்ளாத சந்தேகமடைந்த சத்தியமூர்த்தி அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளார். அப்போது ஏதோ உடலைப் புதைத்து வைத்தது போல் அடையாளங்கள் தென்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மர்ம பூஜை
உடனடியாக இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வடிவேலுக்கு சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு, மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாந்திரீக பூஜை நடந்தப்பட்டு மண்ணில் புதைந்திருக்கும் உடல் சிறிய குழந்தையா? அல்லது ஏதேனும் விலங்குகளை அடித்து புதைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனரா? எனவும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.