8 கி.மீ ஓடி மற்றோரு கொலையை தடுத்த மோப்ப நாய் - உயிர் தப்பிய பெண்!
வேறொரு இடத்தில் நடைபெற இருந்த கொலையை காவல் மோப்ப நாய் தடுத்து நிறுத்திய நிகழ்வு நடந்தேறியுள்ளது.
மோப்ப நாய்
கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் சாலையோரத்தில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துங்கா-2 என்ற மோப்ப நாயுடன், போலீசார் அந்த இடத்துக்கு சென்றனர்.
அப்போது, துங்கா அங்கிருந்து 8 கி.மீ. தூரம் ஓடி ஒரு வீட்டு வாசலில் போய் நின்றது. உடனடியாக போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒருவர் ஒரு பெண்ணை கட்டையால் தாக்கிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நபரின் பெயர் ரங்கசாமி என்பதும், அவர் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்தவர் அவரது மனைவி ரூபா என்பதும் தெரியவந்தது.
இளைஞர் கொலை
மேலும், சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சந்தோஷ் குமார் என்பவர் என்றும் தெரியவந்தது. அதாவது, அழகுக்கலை நிபுணரான தனது மனைவி ரூபா, சந்தோஷ் குமார் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருப்பதாக ரங்கசாமி சந்தேகப்பட்டுள்ளார்.
இதனால் அவர் சந்தோஷ் குமாரை கொலை செய்து சாலையில் வீசிச் சென்றுள்ளார். பின்னர், தனது மனைவி ரூபாவையும் கொலை செய்யும் நோக்கில் ஈடுபட்டிருந்தபோது தான், துங்கா 2 மோப்ப நாய் அந்த வீட்டு வாசலில் சென்று நின்றுள்ளது. ஒருவேளை மோப்ப நாய் அந்த வீட்டுக்குச் சென்றிருக்காவிட்டால் ரங்கசாமி, ரூபாவை கொலை செய்திருப்பார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.