200 ஆண்டு பழமையான கோட்டை: ஒவ்வொரு ஆண்டும் தாக்கும் மின்னல் - சாபத்தின் விளைவா?
200 ஆண்டுகள் பழமையான கோட்டையை ஆண்டுதோறும் மின்னல் தாக்கும் நிகழ்வு.
பழமையான கோட்டை
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள பித்தோரியா கிராமத்தில் ராஜா ஜகத்பால் சிங்கின் கோட்டை அமைந்துள்ளது . இது சுமார் 200 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
ஒரு காலத்தில் 100 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனையாக இந்த கோட்டை இருந்தது. ஆனால் மின்னல் தாக்கத்தால் தற்போது இடிபாடுகளாக மாறிவிட்டது. பழமையான இந்த கோட்டை தற்போது பிரபலமாக இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு ஆண்டும் கோட்டையில் மின்னல் தாக்குவதால்தான்.
இப்படி மின்னல் தாக்குவதால் கட்டிடம் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது. மன்னர் ஜகத்பால் சிங், தனது தந்தையுடன் சேர்ந்து பித்தோரியாவை ஒரு முக்கியமான வர்த்தக நகரமாக நிறுவினார். நகரம் முன்னேறியது, குடிமக்கள் அரசனுடன் மகிழ்ச்சியடைந்தனர்.
அதனால் ஆங்கிலேயரின் கவனம் இந்த நகரத்தின் மீது திரும்பி நகரத்தை வசப்படுத்த நினைத்தனர்.மன்னரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் அதை சொந்த மண்ணிற்கு செய்யும் துரோகமாக நினைக்கத் தொடங்கினர்.
சாபத்தின் விளைவா?
857 சிப்பாய் கலகம் நடக்கும்போதும் ஜகத்பால் ஆங்கிலேயர்களுக்கு உதவும் ஆளாக இருந்துள்ளார். அந்த பகுதியில் போராடிய தாக்கூர் விஸ்வநாத் சஹ்தியோவின் கிளர்ச்சியாளர்களை முறியடிக்க ஜகத்பால் ஆங்கிலேயர்களுக்கு உதவினார்.
இறுதியில் விஸ்வநாத் சஹ்தியோ கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், தாக்கூர் விஸ்வநாத் சஹ்தியோ, மன்னர் ஜகத்பால் சிங்கின் ராஜ்ஜியத்தின் முடிவு இதுவாக இருக்கும் என்றும், அவருடைய அன்புக்குரிய கோட்டை தூசியாக மாறும் வரை மின்னலால் தாக்கப்படும் என்றும் சபித்தார் என்று புராணம் கூறுகிறது.
ஆனால் இங்குள்ள உயரமான மரங்கள் மற்றும் மலைகளில் அதிக அளவு இரும்புத் தாது இருப்பதால் மின்னல் இதை நோக்கி ஈர்க்கப்பட்டு ஆண்டுதோறும் மின்னல்கள் கோட்டையின் மீது விழுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால் மக்கள் இதை நிராகரிக்கின்றனர். அந்தக் காலத்திலும் இங்குள்ள மலைகளில் இரும்புத் தாது இருந்ததாகவும், இப்போது இருப்பதை விட அதிகமாகவும் இருந்ததாகவும் சொல்கிறார்கள். அப்போது ஏன் கோட்டையின் மீது மின்னல் விழவில்லை? இது சாபத்தின் விளைவுதான் என்று மக்கள் நம்புகின்றனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் : எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் : இப்படி கூறுகிறது ரணில் தரப்பு IBC Tamil
