தலைகீழாய் கட்டிப்போட்டு ஆசிட் ஊற்றிய போலீஸ்? சிறுநீரகங்கள் செயலிழந்த இளைஞர்!
இளைஞர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
விசாரணை
புதுக்கோட்டை, விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்(18) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், கை, கால், இடுப்புப் பகுதிகளில் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நகைப்பறிப்பு சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கூறி காவல்துறையினர் தன்னை அழைத்துச்சென்று தாக்கியதாக பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “7 மணிக்கு என்னைப் பிடித்தார்கள். காவல்நிலையத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லவில்லை. நேராக, காவல்நிலையத்திற்கு எதிரேயுள்ள குடோனுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு உடைகளை எல்லாம் களையச் சொல்லி, தொங்கவிட்டு ஆசிட்டை ஊற்றினார்கள்.
போலீஸ் சித்ரவதை
அதோடு 5 பேர் சுற்றி நின்று அடித்தார்கள். தண்ணீர் கேட்டேன் கொடுக்கவில்லை. என் கழுத்தில் தண்ணீர் பாட்டிலைக் கட்டி முடிந்தால் குடித்துக்கொள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். 4 மணி நேரம் கழித்து மீண்டும் வந்து, இறக்கிவிட்டு ரெண்டு கைகளையும், கால்களையும் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு மீண்டும் அடித்தார்கள்.
அப்படியேவிட்டுவிட்டு சாப்பிட சென்று விட்டார்கள். மீண்டும் 7 மணிக்கு மீண்டும் வந்தார்கள். இறக்கிவிட்டு படுக்கவைத்துவிட்டார்கள். முன்னாள் இருவர் கால்களை தூக்கிப் பிடித்துக்கொள்ள மீண்டும் அடித்தார்கள். சுவற்றில் சாயவைத்து கால்களை தலைகீழாக விரித்து அதில் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் தலா இருவர் ஏறி நின்று கொண்டார்கள்.
அத்துடன் கால் விரிந்துவிட்டது. மூன்று நாள் வைத்து அடித்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் இதுதொடர்பாக பேசுகையில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற காரணத்தினால் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்றும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறைக்கு நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுப்பி வைத்ததாகவும், பாண்டியனின் உடலில் உள்ள காயங்கள் மாட்டுவண்டி பந்தயத்தில் ஏற்பட்ட காயம் என்றும் தெரிவித்துள்ளார்.