வரதட்சணை தகராறு - பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்
மத்திய பிரதேசத்தில் வரதட்சனை தகராறில் 20 வயது பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த சசி என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் டாப்ராவில் வசிக்கும் வீரேந்திர ஜாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு திருமணமானதும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் வரதட்சனை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த தகராறு முற்றியதில் கடந்த ஜூன் மாதம் வீரேந்திர ஜாதவ், அந்த பெண்ணின் தந்தையிடம் 3 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ, வீரேந்திராவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் வாயில் ஆசிட்டை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளார்.
அவரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 50 நாட்களுக்கும் மேல் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்பாக யாரையும் விடாதீர்கள் என வீடியோ பதிவிட்டிருக்கிறார். இதனை கைப்பற்றிய போலீசார், வீரேந்திர ஜாதவ்வை குடும்பத்துடன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.