இண்டிகேட்டரை தவறாக போட்ட இளம் பெண் - ஆத்திரத்தில் 3 வாலிபர்கள் செய்த காரியம்!
இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடுமாறிய வாலிபர்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் மற்றொரு பெண்ணும் வந்திருந்தார்.
பின்னர் வீட்டுக்கு புறப்பட்ட அவர்கள், இடதுபுறமாக திரும்புவதாக இன்டிகேட்டரை போட்டுவிட்டு, காரை வலது புறமாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. அந்த பெண் தவறாக இண்டிகேட்டரை போட்டதால் காருக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்த 3 வாலிபர்கள் தடுமாறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அந்த பெண்ணுடன் சண்டையிட்டுள்ளனர். உடனே அந்த பெண் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
பெண்ணுக்கு தொல்லை
அப்போது 3 வாலிபர்களும் விடாமல் தங்களது ஸ்கூட்டரில் காரை விரட்டி சென்றுள்ளனர். 2 கிலோ மீட்டர் தூரம் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்று காரை மடக்கி பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மற்றொரு வாலிபரையும் தேடி வருகின்றனர்.