அரசு மருத்துவமனைக்கு காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரம் வழங்கிய கமல்ஹாசன்!
தனது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ரூ.10 லட்சம் செலவில் நன்கொடையாக கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
கமல்ஹாசன்
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமைக் கொண்டவர்கள் பலர் இருந்தாலும், பலரிலும் தனித்து மேலோங்கி இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் சினிமா வரலாற்றின் ஒப்பற்ற கலைஞன், ஈடு-இணையற்றவர் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், கதை, திரைக்கதை,வசனம், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை ஒருங்கே கொண்டவர் . இவரை ரசிகர்கள் 'உலக நாயகன்' என்று அன்போடு அழைக்கின்றனர்.
சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தலைவருமாக இருந்து வரும் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நன்கொடை
அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ரூ.10 லட்சம் செலவில் நன்கொடையாக கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர் மன்றத்தினர் ரத்த தான முகாம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்துள்ளனர்.