ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம்
நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி கடிதம்
அதில், "மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று சேர்வதில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவித்து, அதன் பலன்களை பெறும்படி மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராமத்தில் உள்ள அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தினால், அந்தக் கிராமம் வளர்ச்சி பெறும்.
இதன் மூலம் நாடும் வளர்ச்சி அடையும். கடந்த எட்டு ஆண்டுகளில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், 'கிராம சுவராஜ்' எனப்படும் கிராம தன்னாட்சி மற்றும் மக்கள் நலப் பணிகளில் பல புதிய மைல் கற்களை எட்டியுள்ளோம்.
தூய்மை இந்தியா இயக்கத்தை கிராமங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்க பஞ்சாயத்து தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர் நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகா நடத்துங்கள்
வரும் 21-ம் தேதி எட்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம்.
யோகா மூலம் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். வரும் யோகா தினத்தில், ஏதாவது ஒரு புராதான அல்லது சுற்றுலா இடத்தில் அல்லது நீர் நிலையை ஒட்டியுள்ள பகுதியில் கிராம மக்கள் அனைவரையும் இணைத்து யோகா நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதானிக்காக இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பிரதமர் மோடி : பதவி விலகிய இலங்கை மின்சார வாரிய தலைவர்