நடுவானில் குட்டித்தூக்கம் போட்ட விமானிகள்; பாதை மாறிய விமானம் - அடுத்து நடந்தது?
2 விமானிகளும் 28 நிமிடங்கள் தூங்கியதால், விமானம் பாதை மாறி பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கிய விமானிகள்
தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 153 பயணிகள் இருந்துள்ளனர்.
விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது துணை விமானியிடம் அனுமதிப்பெற்ற விமானி சில நிமிடங்கள் ஓய்வெடுத்துள்ளார். அப்போது விமானத்தை இயக்கிய துணை விமானியும் சில நிமிடங்களில் தூங்கியுள்ளார். இதனால் விமானம் வழித் தவறியதை அடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அறை விமானத்தை தொடர்புகொள்ள முயன்றுள்ளது.
விசாரணை
ஆனால் மறுபுறத்திலிருந்து எந்த பதிலும் இல்லை. பின்னர் 30 நிமிடங்கள் கழித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகே விமானம் மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவரப்பட்டு ஜகார்த்தாவிற்கு சென்றிருக்கிறது.
இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது