சொந்தமாக வீடு, நிலம் இல்லாதவர்கள் உடனே விண்ணப்பிங்க - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற விரும்பும் பயனாளிகள் திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ராதாபுரம், வள்ளியூர் மற்றும் பணகுடி பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களில் சொந்தமாக நிலம் மற்றும் வீடில்லாத ஏழை,
எளிய மக்களுக்காக வள்ளியூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 504 வீடுகளும்,பணகுடியில் அடுக்குமாடி குடியிருப்பாக 468 வீடுகளும் கட்டுவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
தற்போது பணி தொடங்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் ரூ.10 லட்ம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநில அரசு ரூ.7.5 லட்சமும் மத்திய அரசு ரூ.1.5 லட்சமும் பயனாளிகள் ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி வசதி (லிப்ட்), குடிநீர் இணைப்பு, குடியிருப்பு வளாக மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட சில வசதிகள் செய்து கொடுப்பதற்காக கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.
சபாநாயகர் அப்பாவு
எனவே வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள பயனாளிகள் கூடுதலாக ரூ.3.09 லட்சமும், பணகுடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள பயனாளிகள் கூடுதலாக ரூ.3.19 லட்சமும் வழங்க வேண்டியிருக்கிறது.
இந்த தொகையை கட்டுவதற்கு வள்ளியூர் மற்றும் பணகுடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள பயனாளிகள் அதற்குரிய உறுதிமொழி படிவத்தை செப்டம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வரும் பயனாளிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், பயனாளிகளின் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.