'அதிர்ஷ்டம் இல்லாதவன்' என்கிறார்கள்; அந்த வீரர் மட்டும்தான் சப்போர்ட் - சஞ்சு சாம்சன் வேதனை!
இந்திய அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதை குறித்து சஞ்சு சாம்சன் நேர்காணல் பேசியுள்ளார்.
சஞ்சு சாம்சன்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சஞ்சு சாம்சன் (29). கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானர்.
ஆனால் இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. இறுதியாக இந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இடம் பெற்றிருந்தார்.
ஆனால் ஆசிய கோப்பை 2023, உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் என எதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.
பேட்டி
அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் இருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதை குறித்து சஞ்சு சாம்சன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா எப்போதும் எனக்கு ஆதரவு அளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது நான் கேப்டனான பின் 2வது நபராக எனக்கு போன் செய்தவர் ரோஹித் தான். ஐபிஎல் தொடரில் எனது அறிமுகம் முதலே என்னை பாராட்டி வருகிறார். மும்பை அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடிக்கிறாய் என்று கிண்டல் செய்வார்.
எப்போது ரோஹித் ஷர்மா நட்புடன் பழகுபவர். அதேபோல் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை" என்று சஞ்சு சாம்சான் தெரிவித்துள்ளார்” .