தீயாய் பரவிய வீடியோ; தோனியிடம் அதை செய்தாரா பதிரானா? உண்மை இதுதான்!
எம்எஸ் தோனியின் காலில் விழுந்து பதிரானா ஆசிர்வாதம் வாங்கியதாக வீடியோ ஒன்று பரவி வந்த நிலையில், அங்கு நடந்ததே வேறு என தற்போது தெரியவந்துள்ளது.
பரவும் வீடியோ
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கடந்த 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் இடையே நடந்த ஒரு போட்டியில் சென்னை வீரர் மதீஷா பதிரானா, எம்எஸ் தோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போன்ற ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வந்தது. அந்த வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லை. அதில் பதிரானா, தோனி காலில் விழுவது போன்றும், தோனி அவரை ஆசிர்வதிப்பது போன்றும் காட்சி இடம்பெற்றிருந்தது.
உண்மை என்ன?
இந்நிலையில் அதற்கு நேர் எதிர்பக்கம் இருந்து படம் பிடிக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பந்து வீச ஓடி வரத் துவங்கும் இடத்தை குறிக்க வெள்ளை நிற குறியீட்டு அட்டை ஒன்றை கீழே இருந்து பதிரானா எடுக்கிறார்.
அப்போது தூரத்தில் ஒரு ஃபீல்டரை பார்த்து நகர்ந்து செல்லுமாறு தோனி கைகளை அசைக்கிறார். இதை வேறு திசையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் பதிரானா, தோனி காலில் விழுவது போலவும், தோனி ஃபீல்டரை நகர்ந்து நிற்கச் சொல்வது ஆசிர்வாதம் செய்வது போலவும் உள்ளது. இந்த வீடியோவை உண்மை தெரியாமல் தோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.