உலகக்கோப்பையை அவமதித்த மிட்செல் மார்ஷ்..? 'குரங்கு கைல பூமால' - விளாசும் ரசிகர்கள்!
உலகக்கோப்பையை அவமதித்ததாக ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
உலகக்கோப்பை
இந்தியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 முடிவடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியானது குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் இந்திய அணி சரமாரியாக திணறியது. இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா உட்பட இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் இந்திய பவுலர்களை துவம்சம் செய்தார்.
ரசிகர்கள் கண்டனம்
அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.
இந்நிலையில் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ், கையில் மது பாட்டிலுடன், உலகக்கோப்பையின் மேல் தனது இரண்டு கால்களையும் வைத்து அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனைப் பார்த்த இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பையை பாட் கம்மின்ஸ் அவமதித்து விட்டதாக கூறி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ், குரங்கு கைல பூமாலை, 'பீர்'க்கு இருக்குற மரியாதை கூட அந்த கோப்பைக்கு இல்லையே, இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.