இனி பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் - வருகிறது புதிய சட்டம்
பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற திட்டத்தை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு முன்வந்துள்ளது.
கார் பார்க்கிங்
பேருந்து, ரயில் என பல்வேறு பொதுப் போக்குவரத்து இருந்தாலும், மக்கள் தங்கள் வசதிக்காக பைக், கார் போன்ற சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்வதை விரும்புவார்கள்.
கார் வைத்திருப்பவர்களில் சிலர் தங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளேயே கார் நிறுத்துவதற்கான இட வசதி வைத்திருப்பார்கள். ஆனால் பார்க்கிங் செய்ய இடம் இல்லாத பெரும்பாலானவர்கள் கார்களை வீட்டிற்கு வெளியே பொது இடத்தில் தான் நிறுத்தியிருப்பார்கள்.
100 நாள் திட்டம்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு காரை நிறுத்திவைப்பதற்கான இடம் இருப்பவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய சட்டத்தை அமல் படுத்த உள்ளது.
மும்பை, நாக்பூர், புனே போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சோதனை முயற்சியாக இந்த 100 நாள் திட்டத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
CPA சான்றிதழ்
இதன்படி, முதலில் தனியார் மற்றும் அரசு நிலங்கள் உள்ளூர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட பிறகு, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னர், கார் வாங்க திட்டமிடுவோர், மும்பை மாநகராட்சியிடமிருந்து சர்டிபைடு பார்க்கிங் ஏரியா (CPA) சான்றிதழைப் பெற்று, மாநில போக்குவரத்துத் துறையால் சரிபார்க்க வேண்டும்.
புதிய கார் வாங்கும் போது இந்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லையென்றால் கார் வாங்க முடியாது. கார் வாங்க விரும்புவர்களுக்கு பார்க்கிங் வசதி உள்ளது என்பதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழ் வழங்கப்படும்.
நெரிசல் வரி
இது குறித்து பேசிய போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார். "அரசு பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில் முதலீடு செய்து வரும் நிலையில், தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அவசியம். மேலும் சமீப காலங்களில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் வெடிப்பதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை.
லண்டன், டோக்கியோ, நியூயார்க், போன்ற பெரு நகரங்களில் இந்த நடைமுறை உள்ளது. அதனை அடிப்படையாக வைத்தே இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மேலும் நெரிசல் வரி விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.