பிச்சை எடுக்கவே வெளிநாடு பயணம்; பாக்., நிலை இதுதான் - நாடு கடத்தும் அரசு
பாகிஸ்தானில் இருந்து பிச்சை எடுப்பதற்காகவே ஏராளமானவர்கள் வெளிநாடு வருவதாக கூறப்படுகிறது.
நாடு கடத்தல்
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் உள்விவகாரத்தறை (Interior Minister)அமைச்சர் சையத் மோஷின் ராசா நக்வி கூறியதாவது,
கடந்த 2024ம் ஆண்டு முதல் இப்போது வரை வெளிநாடுகளில் பிச்சை எடுத்ததாக மொத்தம் 5,402 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, ஈராக், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்துமட்டும் 5,033 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் சவூதிஅரேபியாவில் இருந்து 4,850 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அரசு அதிரடி
சவூதி அரேபியாவில் இருந்து சிந்து மாகாணத்தை சேர்ந்த 2,428 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 1098 பேர், கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 819 பேர், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 117 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் உள்பட யாரும் பிச்சை எடுப்பதை சவூதி அரேபியா விரும்புவது இல்லை. இதனால் பிச்சைக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு சவூதி அரேபியா நாடு கடத்தி வருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி வரை கடன் பெற சில நாட்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.