அரசியல் வரலாற்றில் முதல்முறை - மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்!
மகளை, பாகிஸ்தான் அதிபர் முதல் பெண்மணியாக அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிப் அலி சர்தாரி
பாகிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, நாட்டின் 14-வது அதிபராக ஆசிப் அலி பதவியேற்றார்.
இந்நிலையில், தன்னுடைய இளைய மகளான ஆசிபா அலியை(31) நாட்டின் முதல் பெண்மணியாக அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பெண்மணி என்ற பட்டம் பொதுவாக நாட்டின் அதிபரின் மனைவிக்கு தான் செல்லும்.
மகளுக்கு அந்தஸ்து
ஆனால், சர்தாரியின் மனைவி தற்போது உயிருடன் இல்லை. அவரது மனைவியும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ 2007ல் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அதன்பின், 2008-2013க்கு இடையில், அவர் அதிபராக இருந்த சமயத்திலும் முதல் பெண்மணி பதவி காலியாகவே இருந்தது.
தற்போது ஆசிபா, நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்டப் போராட்டம் முதல் ஜனாதிபதி பதவியேற்பு வரை அனைத்து நேரங்களிலும் சர்தாரிக்கு ஆதரவாக நின்றதாக தெரிவித்துள்ளார். எனவே, ஆசிபாவுக்கு முதல் பெண்மணிக்கான அந்தஸ்து வழங்கப்படும் என அவருடைய மூத்த மகள் பக்தவார் பூட்டோ அலி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அறிவிப்பு வெளியானால் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இது முதன்முறையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.