தன்னம்பிக்கை, திறமை! 'விராட் கோலி'யை மனதார புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய வீரர் விராட் கோலியை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.
விராட் கோலி
கிரிக்கெட்டில் 'ரன் மெஷின்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் இந்திய விளையாட்டு வீரர்கள், மற்ற நாட்டு வீரர்கள், முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலதரப்பு பட்டவர்கள் விராட் கோலிக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் விராட் கோலியை புகழ்ந்து பேசியதை பற்றி பார்ப்போம்.
கோலியை குறித்து பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாமுல் ஹக் கூறுகையில் "எந்தவொரு சூழலிலும் தன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், எப்போது விட்டுவிடக்கூடாது என்ற குணமும் கோலியிடம் நிறையவே இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
பாக். வீரர்கள் புகழாரம்
இதுமட்டுமா "கோலி சிறிது நேரம் களத்தில் நின்றால் போதும், அவரது பினிஷிங் டச் வேற லெவலில் இருக்கும், அவரை யாராலும் நெருங்க முடியாது' என்று பாராட்டியுள்ளார் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்.
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பாராட்டி கூறியதாவது "பந்து எந்த இடத்தில் ஸ்ட்ரைக் ஆகப்போகிறது என்பதை துல்லியமாகக் கணித்து, சொல்லிவைத்ததை போல் பந்தை பெவிலியனுக்கு விரட்டும் திறமை கோலியிடம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஒவ்வொரு முறையும் கோலி தன்னைத்தானே மெருகேற்றி வருபவர் என்றும் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக உருவெடுத்துவிட்ட கோலி இன்னும் தன்னால் அணிக்கு எந்தமாதிரியான பங்களிப்பை அளிக்க முடியும் என்ற தேடலை நிறுத்தவில்லை" என்று பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான்.
இப்படியாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒற்றுமையாக இருக்க, மறுபக்கம் பாகிஸ்தான் அணி வீரரை பார்த்து இந்திய ரசிகர்கள் ஜேய்ஸ்ரீ ராம் என கோஷமிடுவது போன்ற ரசிகர்களின் சண்டை ஓய்ந்தபாடில்லை.