டிராக்டர் வித்து டிக்கெட் வாங்குனேன்; இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் - பாக். ரசிகர் குமுறல்!
பாகிஸ்தானின் ஆட்டத்தை பார்த்து மனமுடைந்த ரசிகர் ஒருவர் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 120 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த தொடரில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோற்றது.
ரசிகர் வேதனை
தற்போது இந்தியாவிடமும் தோற்றதால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானின் ஆட்டத்தை பார்த்து மனமுடைந்த அந்நாட்டு ரசிகர் ஒருவர் "3000 டாலர் மதிப்புள்ள டிக்கெட் வாங்குவதற்காக எனது டிராக்டரை விற்றுவிட்டேன்.
இந்தியாவின் ஸ்கோரை பார்த்தபோது, நாங்கள் (பாகிஸ்தான்) தோற்று விடுவோம் என நினைக்கவில்லை. எங்கள் வசம் தான் ஆட்டம் இருந்தது. ஆனால், பாபர் அசாம் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் மனமுடைந்தனர். இந்திய ரசிகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.