ரோஹித் மாஸ்.. வேற கேப்டனா இருந்தா இந்த தப்பு நடந்துருக்கும் - முன்னாள் வீரர் புகழாரம்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பேசிய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 120 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பேசிய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா "இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பை விரும்பினேன்.
நம்பிக்கை வைத்தார்
அவரது இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 119 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் முதல் ஓவரிலேயே துருப்புச்சீட்டு பவுலரை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் அணியில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ரோஹித் நம்பிக்கை வைத்து,
நீங்கள் உங்களின் வேலையை செய்யுங்கள் என்ற அனுமதியை கொடுத்தார். இந்த செயலால் போட்டிக்கு மட்டுமல்லாமல் மொத்த தொடருக்கும், இந்திய வீரர்களுக்கு அவர் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார். குறிப்பாக முதல் ஓவரில் அர்ஷ்தீப்பை கொண்டு வந்த அவர் சிராஜை இரண்டாவது ஓவரில் பயன்படுத்தினார்.
அதற்கு பிறகே பும்ராவிடம் முக்கியமான 2 பவர் பிளே ஓவர்களை கொடுத்தார். சிராஜுக்கு மீண்டும் 7-வது ஓவரை ரோஹித் கொடுத்தார். அந்த வகையில் இந்திய அணியை அற்புதமான க்ளாஸ் வழியில் அவர் நடத்தினார்.