35 நிமிடங்கள் நடந்த அட்டாக்; உயிருடன் பிடிபட்ட பாக்.விமானி - மிரண்ட நாடு
பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாக். தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த பதிலடியால் கலங்கி போன பாகிஸ்தான், நேற்றிரவு திடீரென எல்லையோர மாவட்டங்களில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை நடத்த தொடங்கியது. மேலும், ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்களை குறி வைத்து டிரோன் தாக்குதலையும், ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் ஏவுகணை மூலமாகவும் தாக்குதலை தொடங்கியது.
இந்தியா பதிலடி
இந்த தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எஸ்400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய டிரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தியது. அதேபோல் 8 ஏவுகணைகளையும் முறியடித்தது.
இந்த டிரோன் தாக்குதல் மொத்தமாக 35 நிமிடங்கள் வரை நீடித்தது தெரிய வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை இந்தியா தொடங்கியது.
இதற்கிடையில், எஃப் 16 ரக விமானத்தை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.