ICC தலைவராகும் ஜெய்ஷா; மகிழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - காரணம் என்ன?
ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டது ஒருவிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் ஷா
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா ஐஐசி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிசம்பர் முதல் ஐஐசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷா ஐஐசி தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அவர் தற்போது வகித்து வரும் பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
அடுத்த பிசிசிஐ செயலாளர்
இந்நிலையில் அடுத்த பிசிசிஐ செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. மறைந்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லீ மற்றும் தற்போது IPL தலைவராக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமால் ஆகியோர் பிசிசிஐ செயலாளர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் உள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி முன்னணியில் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
2025 சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் ஆட மறுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கான போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு
2023 ல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நஷ்டத்தை சந்தித்ததாக புகார் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பல கோடி செலவில் மைதானத்தை தயார்படுத்தி உள்ளோம் எனவே போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
இதே போல் 2025 ல் ஆசிய கோப்பை, 2026 ல் T20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிகாரமிக்க அமைப்புகளான ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கை ஓங்குவது முக்கியத்துவம் பெறுகிறது.