சாம்பியன்ஸ் கோப்பை - செக் வைத்த இந்தியா ; கலக்கத்தில் பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த உள்ள பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கடைசியாக 2017 ல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. அடுத்த சாம்பியன்ஸ் கோப்பை 2025 ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாக்கிஸ்தான் செல்ல மறுத்து, இதனால் இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தான் எதிர்ப்பு
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக பல கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்தியுள்ளோம். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் 2026 ல் இந்தியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணி ஆடும் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த ஒப்புக் கொள்ளவில்லை எனில் சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து இந்தியா விலகுவதாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. உலகிலேயே கிரிக்கெட்டிற்கு அதிக ஒளிபரப்பு வருவாய் ஈட்டி தருவது இந்தியா தான்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணி விலகினால் அந்த தொடரின் ஒளிபரப்பு உரிமை அதிக விலைக்கு விற்காது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளால் அதிக லாபம் ஈட்டி வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் , பிசிசிஐக்கு ஆதரவளிக்கும் வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட திட்டமிட்டு உள்ளன. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஆடும் போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த ஒப்புக்கொள்ளுமா அல்லது சாம்பியன்ஸ் கோப்பையை நடத்தும் வாய்ப்பை விட்டுக்கொடுக்குமா என்பது விரைவில் தெரியவரும். தற்போது துபாயில் நடந்து வரும் ஐசிசி யின் வருடாந்திர கூட்டத்தில் இந்த விசயம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.