ஆந்திரா - இத்தாலி செல்லும் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார்? ப.சிதம்பரம் கேள்வி!
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்? என பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நரேந்திர மோடி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று கொண்டார்.
அவருடன் மொத்த 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனிடையே "மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் அமைதிக்காக காத்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ப.சிதம்பரம்
இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்லவுள்ளார்.
மேலும், அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார். இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.