'நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்' - பிரதமராக பதவியேற்றார் மோடி!
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
நரேந்திர மோடி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
தற்போது நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அமைச்சர்கள்
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்தா சோனோவால், ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங், ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, கஜேந்திர சிங் ஷெகாவத், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர்.