தொடர் தோல்வி எதிரொலி - "எந்த தியாகத்திற்கும் தயார்" அழைப்பு விடுத்த ஓபிஎஸ்
அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஓபிஎஸ், டிடிவி போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக அவர்களை விட பின்தங்கி உள்ளது.
இந்நிலையில், அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
"தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலா
ஓபிஎஸ் இன்று அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக ஒன்றிணைய வேண்டுமென சசிகலா நேற்று அழைப்பு விடுத்தார். சசிகலா இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன். அதிமுகவை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும், மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை.
தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது." என நேற்று அழைப்பு விடுத்திருந்தார் சசிகலா.
ஓபிஎஸ், சசிகலாவின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? அதிமுக தலைவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது போகப்போக தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன.