அதிமுக கூட்டணியில் சசிகலா? இனியும் வேடிக்கை பார்க்க முடியாது - பரபரப்பு அறிக்கை!
அதிமுக அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக படுதோல்வி
அதிமுக, 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலுக்கு பிறகு பெரிய வெற்றியை பதிவு செய்திடவில்லை. கட்சி உடைந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் முறை சந்தித்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், அக்கட்சி 40 தொகுதிகளையும் இழந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தின் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது.
அதற்காக தான், நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது.
சசிகலா அறிக்கை
இதுவரை இந்த இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும்,
தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுகாலத்தின் கட்டாயம். இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது, தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கட்சி வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கானபணிகளை உடனே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்தமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.