எந்த முடிவெடுத்தாலும் என்னை கேட்க வேண்டும் - சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2வது முறையாக கடிதம்
அதிமுக தொடர்பாக எந்த முடிவெடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு 2வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இதுவரை முடிந்தபாடில்லை. ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.அவருக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான கடிதத்தை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார். இந்த நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை.
எனவே சட்டமன்றக் குழுக்களை மாற்றுவது தொடர்பாக கடிதம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜுலை மாதம் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.
இதனிடையே சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் என்று அறிவித்த சபாநாயகரிடம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கடிதங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் 2வது முறையாக கடிதம்
அதற்கு பதிலளித்த அப்பாபு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருவருமே கடிதம் தந்திருக்கிறார்கள். அது பரிசீலனையில் உள்ளது.
சபை மரபுப்படியே அனைவருக்கும் இருக்கைகள் வழங்கப்படும்.சட்டமன்ற மாண்புபடி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு இரண்டாவது முறையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.