ஆம்னி பேருந்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. சிஎம்டிஏ முக்கிய அறிவிப்பு
புறநகர் புதிய பேருந்து முனையமான கிளாம்பாக்கம் இன்று திறக்கப்படுகிறது.
புதிய பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில், 130 அரசு பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 500 மாநகர பேருந்துகள் செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
சிஎம்டிஏ அறிவிப்பு
மேலும், 100 கடைகள், 4 உணவகங்கள், துரித உணவகங்கள் பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். அறைகள், 540 கழிப்பறைகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் என பல்வேறு வகையில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயருடன் பயன்பாட்டிற்கு வருகிறது.
SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட… pic.twitter.com/dDSu0V503Y
— CMDA Chennai (@CMDA_Official) December 30, 2023
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து, SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு செல்லும் வகையில் பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்” என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.