தந்தையை துடி துடிக்க கொன்ற மகன்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சொத்துக்காகத் தந்தையைத் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை
கோவை மாவட்டம், அனந்தபுரம் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னி மலை கவுண்டர். இவருக்கு வயது 96.அனந்தபுரத்தில் 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வேலுச்சாமி, நடராஜன், ஆறுச்சாமி என்கிற மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில் அண்ணன் தம்பியான நடராஜன் மற்றும் ஆறுச்சாமி ஆகியோருக்கு சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னிமலை கவுண்டர் சொத்துக்களை அண்ணன் வேலுச்சாமிக்கும், தம்பி நடராஜனுக்கும் எழுதிக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக ஆறுச்சாமி தனது தந்தையை அவரது பராமரிப்பில் வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னிமலை கவுண்டர் உயிரிழந்துள்ளார். ஆனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மூத்த மகன் வேலுச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிர்ச்சி
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவில், இறந்துபோன சென்னிமலை கவுண்டரின் கழுத்தில் துணியால் இறுக்கி காயம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் தனது குழுவினர் ஆறுச்சாமியைப் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில்,சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தனது அண்ணன்களான வேலுச்சாமி, நடராஜன் ஆகியோருக்கு சாதகமாகத் தனது தந்தை சாட்சி அளித்து விடுவார் என்ற காரணத்தினால்,
வேஷ்டியால் கழுத்தில் இறுக்கி கொலை செய்து விட்டதாகக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஆறுச்சாமியைக் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சொந்த மகனே சொத்திற்காகக் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .